Saturday, January 29, 2011

Vaiko to sit on nagai Feb 6 to...Condemn Fisherman Killing...

மீனவர் படுகொலையை கண்டித்து நாகையில் 6-ந் தேதி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உண்ணாவிரதம் இருக்கிறார்.

ம.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அன்றாட நிகழ்ச்சிகள் ஆகி விட்டன. கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை கடற்படையினர், பன்னாட்டு கடல் பரப்பிலும், இந்திய கடல் எல்லைக்கு உள்ளேயும் அக்கிரமமாக நுழைந்து அங்கு மீன் பிடிக்கின்ற தமிழக மீனவர்களின் வலைகளை அறுப்பதும், படகுகளை உடைத்து நொறுக்குவதும், தமிழக மீனவர்களின் ஆடைகளை களைந்து அம்மணமாக்கி கடலுக்கு உள்ளே தூக்கி வீசு வதும் சுட்டுக் கொல்வதும் வாடிக்கையாகி விட்டன.

கடந்த 5 ஆண்டுகளில் இந்த சம்பவங்கள், வாரம் தவறாமல் நடக்கின்ற கொடுமையாகி விட்டது. தமிழக மீனவர்கள் வேதனையால் துடித்து எண்ணற்ற முறை போராட்டங்கள் நடத்தியும், காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசும், தமிழ்நாட்டில் தி.மு.க. அரசும், மீனவர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.


இந்திய அரசு, இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தால், தாக்குதலை தடுக்க வேண்டிய தக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு இருந்தால் மீனவர்கள் கொல்லப்படுவதை தடுத்து இருக்கலாம், ஆனால் இந்திய அரசு கடமையை செய்யவில்லை. இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்களை நியாயப்படுத்துகின்ற வகையிலே இந்திய தலைமை அமைச்சரின் கருத்துகளும், மத்திய உள்துறை அமைச்சர் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஆகியோரின் கருத்துகளும் அமைந்து உள்ளன.

அண்மையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மீனவர் வீரபாண்டியன் சுட்டு கொல்லப்பட்டார். மீனவர் கண்ணீ­ர் உலர்வதற்கு உள்ளாகவே, புஷ்பவனம் மீனவர் ஜெயக்குமார், இலங்கை கடற்படையினரால் கொடூரமாக கொல்லப்பட்டதும், தமிழக மீனவர்கள் உள்ளத்தில் குமுறலையும், இனி நம் உயிர்களுக்கு பாதுகாப்பே இல்லை என்கின்ற கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மீனவர்களை படுகொலை செய்கின்ற, இலங்கை கடற்படையை இயக்கும் சிங்கள கொலை பாதக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கவும், இனி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டால், அதற்கு கடமை தவறும் இந்திய அரசு தான் பொறுப்பாளி ஆகும் என்பதை சுட்டிக்காட்டி, மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கவும், தமிழக மீனவர்களின் துயரத்தில் பங்கு ஏற்கவும், பிப்ரவரி 6ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாகப்பட்டினத்தில் ம.தி.மு.க. உண்ணாநிலை அறப்போரை மேற்கொள்கிறது. கழகப் பொதுச் செயலாளர் வைகோ, தலைமை ஏற்கிறார். கழக கண்மணிகளும், பொதுமக்களும், இந்த அறப்போரில் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Share/Bookmark

No comments:

Post a Comment