எனது வாழ்க்கையின் பல்வேறு நிலையில் உறுதுணையாக இருந்து, வழிகாட்டியாகத் திகழ்ந்தது திருக்குறள் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.Abdhul
ராமேசுவரம் மண்டபம் ஒன்றியம் எண் 1 நடுநிலைப்பள்ளி வந்த டாக்டர் அப்துல் கலாம், நூலகம், அறிவியல் ஆய்வகம், கம்ப்யூட்டர் அறைகளை திறந்து வைத்து பேசியதாவது:-
எனது மனதில் மகிழ்ச்சியான உணர்வு, பூரிப்பை ஏற்படுத்தும் இடம் ராமேசுவரம். இப்பள்ளியில் 1937ல் சேர்ந்து, ஆரம்பக் கல்வி முதல் எட்டாவது வரை படித்தேன். உங்களைப் போன்று சிறுவனாக இருந்தபோது, மேல்நிலைப்பள்ளிக்கு போக முடியுமா என்ற பயம் மனதில் தோன்றியது. எனது ஆசிரியர் சிவசுப்ரமணியம், எனக்கு வழிகாட்டியாக இருந்து, நல்ல லட்சியத்தை கற்றுத் தந்ததால், உயர் கல்வி முடித்து, வான்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். எனது வாழ்க்கையில் பல்வேறு நிலையில், உறுதுணையாக இருந்து வழிகாட்டியாக என்னை வழி நடத்தியது, திருக்குறள் தான்.Klam
வாழ்க்கையில் லட்சியம், அறிவு, கடின உழைப்பு, விடாமுயற்சி என நான்கையும் நீங்கள் கடைபிடித்தால், எதிர்காலத்தில் மகானாக முடியும். கடந்த 10 ஆண்டுகளில், நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேல் மாணவர்களை சந்தித்துள்ளேன். நாட்டை வளமான வல்லரசாக உருவாக்க வலியுறுத்தி, மாணவர்களிடம் பேசியுள்ளேன். அறிவார்ந்த இளைஞர்கள் தங்களது நேரம், அறிவு, ஆற்றலை பயன்படுத்தி, 2020க்குள் அனைத்து துறையிலும் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும். மனதில் உறுதி இருந்தால், நீங்கள் வெற்றி அடைவீர்கள். இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.
அதன்பிறகு, மாணவ-மாணவிகளோடு அப்துல்கலாம் உரையாடினார். ஒரு மாணவி, "உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்த காலம் எது?" என்று கேட்டாள். அதற்கு அப்துல்கலாம், "நான் என் பள்ளி நாட்களில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த காலம் தான் மிகுந்த மகிழ்ச்சியான காலம்" என்றார். தொடர்ந்து அவர் பேசும்போது, "உங்கள் அனைவரின் சிரித்த முகங்களை பார்க்கும்போது, எனக்கு அக்னிச் சிறகுகளில் நான் எழுதிய கவிதைகள் நினைவுக்கு வருகின்றன. எண்ணத்திலே தூய்மை இருந்தால் நடத்தையில் அழகு மிளிரும். நடத்தையில் அழகு மிளிர்ந்தால் குடும்பத்தில் சாந்தி நிலவும். குடும்பத்தில் சாந்தி இருந்தால் நாட்டில் சீர்முறையும் உலகத்தில் அமைதியும் நிலவும். நம்பிக்கையோடு எதையும் துணிவோடு செய்தால் நாம் வெற்றி அடைவது உறுதி" என்றார்.
பின்னர் 11.45 மணிக்கு அப்துல் கலாம் அங்கிருந்து புறப்பட்டு, முஸ்லிம் தெருவில் உள்ள பூர்வீக வீட்டுக்கு சென்றார். அங்கு அவருடைய அண்ணன் மகள் நசீமாமரைக்காயர் வரவேற்றார். அந்த வீட்டின் மாடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. அதை அப்துல் கலாம் பார்வையிட்டார். அங்கு வீடு கட்டுமான பணி நடப்பதால் அவருடைய அண்ணன் முகமது முத்துமீரான் லெப்பை மரைக்காயர், இன்னொரு மகளான மெகராஜ்பேகம் வீட்டில் தங்கி இருந்தார். அங்கு அப்துல்கலாம் சென்று அண்ணனையும், உறவினர்களையும் சந்தித்தார். வீட்டுக்குள் உறவினர்களை மட்டுமே அனுமதித்தனர்.
அப்துல்கலாம் பள்ளிக்கூடத்தில் இருந்து புறப்படும்போதும், வீட்டில் இருந்து வெளியே வந்தபோதும் மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள். மதிய உணவுக்குப் பின் அவர் மதுரை புறப்பட்டார். மதுரையில், மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை அவர் தொடங்கி வைத்தார். பிறகு, விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
மதுரை மீனாட்சி மிசன் ஆஸ்பத்திரியில் சலுகை கட்டண குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சை மையம் (கேமிலா) திறப்புவிழா நேற்று நடந்தது. குழந்தைகள் சிகிச்சை பிரிவின் இயக்குனர் டாக்டர்.ஜெயபோஸ் வரவேற்புரையாற்றினார். ஆஸ்பத்திரி நிறுவனர் டாக்டர்.சேதுராமன் தலைமை தாங்கினார். இயக்குனர் டாக்டர்.ராஜசேகரன், துணைத் தலைவர் டாக்டர். குருசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:-
மீனாட்சி மிசன் ஆஸ்பத்திரி மக்களுக்கு பல்வேறு வகையான மருத்துவ சேவைகளை செய்து வருகிறது. அதன் நிறுவனர் மேலும் பல மக்கள் சேவைகளை செய்ய வேண்டும். குழந்தைகளுக்கான சலுகைக்கட்டண புற்றுநோய் சிகிச்சை மையம் கேமிலாவின் இயக்குனர் ஜெயபோஸ் அமெரிக்காவில் நியூயார்க் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர். அவர் இந்தியா திரும்பி வந்து இந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை நிர்வகிப்பது பெருமைக்குரியது.
இந்தியாவை பொறுத்தமட்டில் ஆண்டுக்கு 48 ஆயிரம் குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 2,600 குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், தமிழகத்தில் 5 இடங்களில் மட்டுமே குழந்தை புற்றுநோய் சிகிச்சை மையங்கள் உள்ளன. தற்போது தென் தமிழக மக்களுக்காக மீனாட்சி மிசன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு உள்ளது.
புற்றுநோய் கண்டறியப்பட்டால் நிச்சயமாக அதனை குணப்படுத்த முடியும் என டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மருத்துவத்துறையின் முன்பு உள்ள மிகப்பெரிய சவால் புற்றுநோயை தடுப்பதும், சிகிச்சை அளிப்பதும் ஆகும். இதற்காக அதிக அளவு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தியாவில் புற்றுநோய் சம்பந்தமான ஆராய்ச்சி ஐதராபாத்தில் உள்ள நுண்உயிரியில் ஆராய்ச்சி மையத்தில் மேற்கொள்ளப்படுகிறது. அமெரிக்காவில் பிரவுன் கேன்சர் ஆராய்ச்சி மையத்தில் பெண்களை பாதிக்கும் பின்கழுத்து புற்றுநோய்க்கான மருந்துகளை கண்டுபிடித்து வருகின்றனர். மேலும், புற்றுநோய் சிகிச்சை, புரோட்டான் சிகிச்சை, மரபணு, நுண்உயிரியல், ஸ்டெம்செல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும். மீனாட்சி மிசன் ஆஸ்பத்திரி தென்மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்களுடன் ஒருங்கிணைந்து கிராமப்புற பள்ளிக்கூடங்களில் படிக்கும் குழந்தைளுக்கு புற்றுநோய் உள்ளதா என்பதை கண்டறியவேண்டும். அந்த குழந்தைகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பேசிய கேமிலா இயக்குனர் ஜெயபோஸ், இந்த ஆஸ்பத்திரியில் தற்போது 100 குழந்தைகளுக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இதில் 60 குழந்தைகளுக்கு சலுகை கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. வருடத்திற்கு சுமார் 500 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறோம் என்றார்.
No comments:
Post a Comment