கொல்கத்தாவிலிருந்து வரும் 12ம் தேதி பா.ஜ.க.வினர், "ராஷ்டிரிய ஏக்தா யாத்திரை"யை துவங்குகின்றனர். பல்வேறு மாநிலங்கள் வழியாகச் செல்லும் யாத்திரை குழுவினர், இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியை ஏற்றியபடி செல்கின்றனர். வரும் 26ம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் தங்கள் யாத்திரையை நிறைவு செய்யும் பா.ஜ.,வினர், ஸ்ரீநகரில் லால் சவுக் பகுதியில் ஊர்வலமாகச் சென்று தேசியக் கொடியை ஏற்றுகின்றனர். இதுகுறித்து காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியதாவது:-
குடியரசு தினத்தன்று, மாநிலத்தில் நடக்கும் அரசு விழாக்களில் மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் தேசியக் கொடி ஏற்றப்படும். அப்படியிருக்கும் போது, பா.ஜ.,வினர் ஊர்வலமாக வந்து லால் சவுக் பகுதியில் கொடியேற்ற உள்ளதாகக் கூறுவது தேவையற்றது. கடந்த சில மாதங்களாக வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்டிருந்த மாநிலம், தற்போது அமைதிக்கு திரும்பியுள்ளது. பா.ஜ.,வினரின் இந்த செயலால், காஷ்மீரில் மீண்டும் வன்முறை தூண்டப்பட்டு, அமைதி சீர்குலையும் நிலை ஏற்படும். எனவே, பா.ஜ.,வினர் தனிப்பட்ட முறையில் தேசியக்கொடி ஏற்றுவதை கைவிட வேண்டும். லால் சவுக் பகுதியில் பா.ஜ.,வினர் கொடியேற்றுவதற்கு தற்போது என்ன அவசியம் ஏற்பட்டுள்ளது? மீறி, கொடியேற்றி, அதனால், ஏதேனும் தேவையற்ற விளைவுகள் ஏற்படுமானால், அதற்கு பா.ஜ.,வினரே முழு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment