மதுரை, ஜன. 8-
மதுரை மாநகராட்சி 45 வது வார்டு இடைத் தேர்தலில் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
மதுரை மாநகராட்சி 45 வது வார்டுக்கான இடைத் தேர்தலில் தேர்தல் அதிகாரி மார்க்சிஸ்ட் வேட்பாளின் மனுவை நிராகரித்தார். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்து அறிக்கை வெளியிட்டதோடு மாநில தேர்தல் ஆணையர் உடனடியாகத் தலையிட வலியுறுத்தியது. அதன்படி மாநில தேர்தல் ஆணையர் தலையிட்டு மார்க்சிஸ்ட் வேட்பாளர் சந்திரசேகர் மனுவையும் சுயேட்சை வேட்பாளர் மனுவையும் ஏற்றுக் கொண்டு, ஜனவரி 10 ம் தேதி தேர்தல் நடத்த உத்தரவிட்டார்.
மாநில தேர்தல் ஆணையரின் உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தேர்தல் ஆணையரின் உத்தரவுக்கு இடைக் காலத் தடை உத்தரவு பெற்றனர். இதன் அடிப்படையில் தேர்தல் நடத்தாமலே திமுக வேட்பாளர் கே.முருகேஸ்வரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு அவசர அவசரமாக பதவி ஏற்பு நிகழ்ச்சியையும் நடத்தி முடித்துவிட்டனர்.
ஒரு மாநகராட்சி வார்டு தேர்தலைக் கூட ஜனநாயக ரீதியாகவும், நேர்மையாகவும் நடத்த முன்வராமல் திமுகவினர் அராஜகம் செய்கின்றனர். குறுக்கு வழிகளை கையாண்டு எதிர்க்கட்சி வேட்பாளரது மனுவை நிராகரிக்க வைப்பதும், பிறகு மாநில தேர்தல் ஆணையரின் உத்தரவுக்கும் உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறுவதும், தேர்தல் நடத்தாமல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது போன்ற பல்வேறு அராஜக செயல்கள் அரங்கேறியுள்ளன.
மக்களை நேரடியாகச் சந்திக்க அச்சப்படும் திமுகவினர், வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற எத்தகைய நிலைக்கும் செல்வார்கள் என்பதையும் இச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. இது போன்ற செயல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், இச் சம்பவத்தை ஒரு அனுபவமாகக் கொண்டு தேர்தல் ஆணையம் மிகவும் விழிப்போடு இருந்து செயல்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment