Sunday, January 9, 2011

Seeman unarchi thanama thirupi adipam

இற்றுத்தவிக்கும் இனமாகி விட்டதடா தம்பி நம் இனம்:

 


கண்­ணீர் சுரப்பியே இயங்காமல் போகிற அளவுக்கு இற்றுத்தவிக்கும் இனமாகிவிட்டதடா தம்பி நம் இனம் என்று சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமானின் "திருப்பி அடிப்பேன்" தொடரின் 8வது பாகத்தில் கூறியுள்ளதாவது:-
ஈழத்து நிகழ்வுகளை நெஞ்சு தகிக்கச் சொல்லும் "ஆணிவேர்" படத்தின் படப்பிடிப்பு நடந்த நேரம்... "தன் பிள்ளைகளைப் பறிகொடுத்த தாயின் கண்­ணீரை அப்படியே பதிவாக்கினால் ஈழக் கோரத்தை எல்லோருக்கும் புரியவைக்க முடியும்!" என இயக்குநர் ஜான் சொல்ல... அப்படி ஒரு தாயை அழைத்து வருகிறார்கள். சிங்கள இராணுவத்தின் கோரப்பசிக்கு தன் குழந்தைகளைப் பறிகொடுத்தவள் அந்தத் தாய்.
"அம்மா, நீங்க அழுவதுபோல் படம் எடுக்க வேண்டும். குழந்தைகள் இறந்ததை மறக்கச் சொல்ல வேண்டிய நாங்களே, அதை நினைத்து உங்களை அழச் சொல்லும் சூழலில் இருக்கிறோம். உங்கள் கண்ணீ­ர் இந்த உலகத்தை நிச்சயமாக உலுக்கும்!" என விளக்கிச் சொல்கிறார்கள் படப்பிடிப்புக் குழுவினர். அவர்கள் சொல்லச் சொல்ல... வெறித்துப்போய் பார்த்த அந்தத் தாய் ஒருகட்டத்தில் கதறத் தொடங்கினாள். ஆனால், அவள் கண்களில் இருந்து ஒரு சொட்டு நீர்கூட வரவில்லை.
"அழுது அழுது கண்­ணீரே வத்திப்போச்சுப்பா... எத்தனை வருசத்துக்குத்தான் எங்களால அழ முடியும்? நான் மட்டும் இல்லை... எங்கட சனங்க எல்லோருடைய கண்ணுலயும் கண்­ணீரே இல்லப்பா... இனி பறிகொடுத்து அழறதுக்கு எங்ககிட்ட எதுவுமே இல்லைப்பா..!" என அவர் சொல்ல, மொத்தக் குழுவுக்கும் கண்­ணீர் கோத்துக்கொண்டது.
கண்ணீ­ர் சுரப்பியே இயங்காமல் போகிற அளவுக்கு இற்றுத்தவிக்கும் இனமாகிவிட்டதடா தம்பி நம் இனம்... "பேசினால் குற்றம்... எழுதினால் எதிர்ப்பு..." என்கிற ஆட்சியில் நம்மால் என்ன செய்ய முடியும் என்கிற தயக்கம்தானடா தம்பி நம்மை முறுக்கேறவிடாமல் தடுக்கிறது. நம் இன விடுதலைக்கான போராட்டம் மட்டும்தான் இன்றைக்கு நடக்கவில்லையே தவிர, தினந்தோறும் ஏராளமான போராட்டங்கள் தமிழகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இஸ்லாமிய மக்களுக்கு, தாழ்த்தப்பட்டோருக்கு, உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, பாட்டாளி வர்க்கத்துக்கு, கிறிஸ்துவ சிறுபான்மை மக்களுக்கு, நலிந்த தொழிலாளர்களுக்கு என பலதரப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தமிழர் தேசிய இன விடுதலை அடைந்தால்தான் இதர விடுதலைகளை நாம் அடைய முடியும் என்கிற அடிப்படை உண்மை நமக்குப் புரியவில்லை.
ஐந்து மகன்கள் வாழும் ஒரு குடும்பத்தின் சொத்து அடமானத்தில் இருக்கிறது. "எனக்கு இவ்வளவு" என ஐந்து பேரும் அடித்துக் கொள்கிறார்கள். அடமானத்தில் இருக்கும் நிலத்தை மீட்டால்தானே பங்குபோட முடியும் என்கிற உண்மை ஒருவருக்கும் புரியவில்லை. அதேபோல்தான் தமிழகத்தின் நிலையும்!

ஈழப் போர் இத்தனை துயரமான முடிவுக்கு வந்தபோதும் - முள்வேலி முகாமில் தமிழ் மக்கள் முடக்கப்பட்டபோதும் - ஆயிரக் கணக்கான போராளிகள் சிறுகச் சிறுகச் சிதைக்கப்பட்டபோதும் நாம் அமைதியாக இருந்தது ஏன் தெரியுமா? இனத்தின் மீதான தலையாயப் பற்றுத் தளர்ந்துபோனதும், "நம்மால் எதுவும் முடியும்!" என்கிற தன்மானப் பற்று உலர்ந்து போனதும்தான்!
ஈழப் போர் உக்கிரமாகி, இரத்தமும் சதையுமாக ஆயிரமாயிரம் பேர் செத்து வீழ்ந்தபோதும், "முதல்வர் என்கிற பதவியை வைத்து ஒன்றும் செய்ய முடியாது!" என சப்பைக்கட்டு கட்டினார்களே... ஒன்றும் செய்ய முடியாதப் பதவியைத் தக்க வைக்கத்தானே இன்றைக்கு கூட்டணியையும் தங்கள் பாதுகாப்பையும் தக்க வைத்துக்கொள்ள அல்லாடுகிறார்கள்? இடையில், "நாங்கள் தலையிட்டு இருந்தால் போர் நின்று இருக்குமா?" என்கிற துப்பற்ற கேள்வி வேறு... "நம்மால் செய்திருக்க முடியும்!" என்பதற்கான பட்டியலை இவர்கள் முன்னால் இப்போது வைக்கிறேன். துப்பற்ற கேள்வியைத் துப்பியவர்களால் என் கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா?
சந்திரசேகரராவ் என்கிற ஒற்றைத் தலைவனின் உண்ணாவிரதம் ஆந்திராவையும் தாண்டி, இந்தியாவை ஆளும் காங்கிரஸின் தலையில் ஆணி அடித்ததே... அவர் கிளப்பிய தனித் தெலங்கானா கோரிக்கையைத் தணிக்க முடியாமல் மத்திய - மாநில அரசுகள் ஸ்தம்பித்து நின்றனவே... மாநிலப் பிரிவுக்கே அந்த அளவுக்குப் போராடிய ஒரு தலைவனைப் போல், இனத்தின் விடிவுக்குப் போராட இங்கே ஒரு தலைவனும் இல்லையா?
ஈழத்துப் போரின் இன்னல் பொறுக்காமல் துடித்து வெடித்த இந்தத் தொப்புள்கொடி உறவுகளுக்கு தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசு துணையாக நிற்காதது வரலாற்றுத் துயரம். அவர்களே இனத்தின் போராட்டத்துக்கு வினையாக நின்றது வரலாற்றுத் துரோகம்!
ஈழத்துக்கு ஆதரவான போராட்டங்கள் பொங்கி வெடித்தபோது, "மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் மதிக்க வேண்டியவர்கள் நாங்கள். இனியும் தாமதித்தால் தமிழகத்தின் போராட்டங்கள் பன்மடங்காகப் பெருக்கெடுக்கும். அதனால், உடனடியாகப் போரைத் தடுத்து நிறுத்துங்கள்!" என காங்கிரஸ் அரசுக்கு தமிழக அரசு எச்சரிக்கை செய்திருக்க வேண்டும். ஆனால், ஈழத்தில் எத்தனை பேர் செத்தாலும் சரி, இருக்கைக்கு இடைஞ்சல் வந்துவிடக் கூடாது என நினைத்தது தி.மு.க. அரசு.
"எங்களால் என்ன செய்ய முடியும்?" எனக் கேட்டவர்கள் ஏன் எங்களின் போராட்டங்களை முடக்கினார்கள்? தம்பி முத்துக்குமார் தொடர்ந்த இரத்த உறவுகள் உடலையே தீக்குச்சியாக ஏந்தியபோதும், அந்த உணர்வு எழுச்சியை எந்த உள்நோக்கத்துக்காக அடக்கினார்கள்? முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட மாணவர் கூட்டத்தைப் பார்த்து, அத்தனை கல்லூரிகளுக்கும் விடுதிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாணவ ஒருங்கிணைப்பை மட்டுப்படுத்திய மர்மம் என்ன?
முத்துக்குமாரைத் தொடர்ந்து தங்கள் இன்னுயிரை ஈழத்துக்காக எரியூட்டிய வீரக்கொழுந்துகளைக் குடிகாரர்கள் என்றும், குடும்பப் பிரச்சினை என்றும் சொல்லி, இழவு வீட்டையும் இழிவுபடுத்தியது எதற்காக? கொதிப்பு அடங்காமல் குவிந்த வழக்கறிஞர்கள் மீது காவல்துறை அதிகாரிகளை வைத்தே கண்மூடித் தாக்குதல் நடத்தியது எதற்காக? ஈழம் குறித்த செய்திகளோ படங்களோ எதிலும் வந்துவிடாதபடி தடுத்து ஊடக சர்வாதிகாரம் செய்தது யாருடைய உறுதுணைக்காக?
"எங்களால் என்ன செய்ய முடியும்?" எனக் கேட்டுக்கொண்டே எங்களுக்கு எதிராக எல்லாமும் செய்தவர்கள்தானே நீங்கள்? "நாங்கள் கூட்டணியில் இருந்து விலகி இருந்தால் மட்டும் என்ன நடந்திருக்கும்?" என உங்கள் மீதான பழியைத் தாங்க முடியாமல் இன்றைக்கும் பரப்புரை செய்கிறீர்களே... காங்கிரஸ் அரசின் உச்சந்தலையை உலுக்கி இருக்க உங்களால் நிச்சயம் முடிந்திருக்கும்! அன்றைய நிலையில் காங்கிரஸ் அரசைத் தாங்கிப்பிடிக்கும் சக்தியாக இருந்தது இந்தத் தாய்த்தமிழகம்தான்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேரும் அன்றைக்கு காங்கிரஸ் அரசுக்காக ஆதரவை விலக்கி இருந்தால், காங்கிரஸ் அரசு நிச்சயமாக கவிழ்ந்து இருக்கும். "இந்திய அரசு கவிழ்ந்தது ஏன்?" என்கிற கேள்வி உலகையே உலுக்கி இருக்கும். உலக ஊடகங்களை ஒரே கணத்தில் தமிழர்கள் பக்கம் திருப்பி இருக்கும். அன்றைய தினத்திலேயே ஈழப் பிரச்சினை உலக அரசியலாக மாறி இருக்கும். சொந்த இனத்தின் பிரச்சினையை சர்வதேச அரசியலாக மாற்றக் கிடைத்த வரலாற்று வாய்ப்பை... கண்முன்னாலேயே தொலைத்தீர்களே... அந்தத் துரோகம் யாரை அய்யா சேரும்?
"நானே அடிமை" என உதடு துடிக்கச் சொன்னீர்களே... ஒரு அடிமை ஐந்து முறை நாடாண்ட அதிசயம் எப்படி ஐயா நடந்தது? மன்னிக்கவே முடியாத வரலாற்றுத் துரோகத்தைச் செய்துவிட்டு, "என்னால் முடிந்தது இவ்வளவுதான்... நான் ஈழப் பிரச்சினைக்காக இரண்டு முறை பதவியை இழந்தவன்!" என உதடு பிதுக்கிச் சொல்கிறீர்களே... ஈழத்துக்காக முதல் முறை பதவி இழந்த உங்களை மறுபடியும் பதவியில் அமர்த்தியது யாராம்? அந்த இன்னொரு வாய்ப்பை உங்களுக்கு வழங்கியது எங்களின் தன்மானத் தமிழர்கள்தானே... நீங்கள் நகத்தை இழந்தால் விரலையே இழக்கத் தயாராக இருந்த தமிழ் மக்களை நம்பாமல் போனது ஏன்?
இனமானம் இழந்து - தன்மானம் தளர்ந்து இன்னமும் நீங்கள் பாடும் இயலாமைப் பாட்டைக் கேட்க நாங்கள் ஒன்றும் கிளிப்பேச்சு கேட்பவர்கள் அல்ல... புலிப்பேச்சு கேட்பவர்கள்!
திருப்பி அடிப்பேன்!...




Share/Bookmark

No comments:

Post a Comment