தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழையால் 28 மாவட்டங்களில் சேதம் ஏற்பட்டது. கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் பெருத்த சேதம் ஏற்பட்டது. 203 பேர் உயிரிழந்தனர். ஏராளமான கால்நடைகளும் இறந்தன. பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கின. அதனால் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது.
முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் கடந்த மாதம் 7-ந் தேதி தமிழக அமைச்சரவையின் அவசர கூட்டம் நடந்தது. அதில், பெருமழையால் ஏற்பட்ட பயிரிழப்புக்கும், சாலைகள், குளங்கள், ஏரிகள் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நிரந்தரமாக சீரமைக்கவும் தேவையான ரூ.1,832 கோடியை, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை ஏற்று, தமிழகத்தின் வெள்ள சேதங்களை பார்வையிட்டு மதிப்பீடு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலர் எல்.விசுவநாதன் தலைமையில் மத்திய உயர்மட்டக் குழு, வெள்ளம் பாதித்த மாவட்டங்களை 3 நாட்கள் பார்வையிட்டு சேதங்களை மதிப்பிட்டனர்.
அதன்பின்னர் டெல்லி திரும்பும் முன்பு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய குழுத் தலைவர் எல்.விசுவநாதன் கூறுகையில், `வெள்ள சேதம் தொடர்பான அறிக்கையை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம் என்று' தெரிவித்தார். அதன்படி மத்திய அரசிடம் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், தமிழக வெள்ள சேதங்களுக்கு எவ்வளவு தொகை கொடுக்கலாம் என்று மத்திய அரசு இன்னமும் முடிவு செய்யவில்லை.
இதற்கிடையே மத்திய அரசு நிதிக்காக காத்திருக்காமல், தமிழக அரசு நிதியில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக முதல்-அமைச்சர் கருணாநிதி ரூ.1,100 கோடி ஒதுக்கினார். அதன்படி, பயிர் சேதங்களுக்காக ரூ.400 கோடியும், பழுதடைந்த சாலைகள், குளங்கள், ஏரிகளை தற்காலிகமாக சீரமைப்பதற்காக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகியவற்றிற்கு ரூ.200 கோடியும், நிரந்தர சீரமைப்புப் பணிகளுக்காக மேற்சொன்ன 4 துறைகளுக்கும் ரூ.500 கோடியும் ஆக மொத்தம் ரூ.1,100 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லுக்கு ஒரு எக்டேருக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணமும், மானாவாரி பயிருக்கு ஒரு எக்டேருக்கு ரூ.4 ஆயிரமும், நெல் அல்லாத மற்ற பாசனப் பயிருக்கு ரூ.7 ஆயிரத்து 500-ம் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார்.
வெள்ள நிவாரணம் குறித்து வருவாய் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள், கால்நடைகள் இறப்பால் ஏற்பட்ட இழப்பு, குடிசைகள் சேதம் ஆகியவற்றிற்காக சம்பந்தப்பட்டவர்களுக்கு இதுவரை ரூ.75 கோடி நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. பயிர் சேதங்களுக்கு நேற்று வரை ரூ.390 கோடி நிவாரணத் தொகை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது. அந்த வங்கிகள், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கி வருகிறார்கள்" என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment