Saturday, January 15, 2011

Seeman Pongal Wishes Feelings

ஆட்சியாளர்களின் சர்வாதிகாரத்திற்கு எதிராகத் தமிழர் தம் நல் வாழ்விற்காய் போராடுவோம் என்பதனை இந்த நன்னாளில் சூளுரைத்து அதன் வழி பயணிப்போம் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது காலம் காலமாகத் தொடரும் நம் தமிழர் நம்பிக்கை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகத் தமிழர் தம் வாழ்வு முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்குத் துன்பமும் துயரமுமாகக் காட்சியளிக்கின்றன. பழந்தமிழர் வீரத்தை நிகழ்காலத்தில் நம் கண் முன்னே கண்ட ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இந்திய சிங்கள ஏகாதிபத்தியத்தால் கொல்லப்பட்டு, அவர்களது போராட்டம் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், மீதமுள்ள தமிழர்கள் முள்வேலி முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.
உயிரை மட்டும் கையிலேந்தி இந்த உலகில் எங்காவது போய் பிழைத்துக் கொள்ளலாம் என்று இலங்கையில் இருந்து படகு கட்டித் தப்பி வந்த தமிழர்கள் மலேசியக் கடற்பரப்பில் சுற்றி வளைக்கப்பட்டனர். கை கொடுத்து உதவ எந்த நாடும் முன்வரவில்லை. அகதி என்கிற அடிப்படையில்கூட உலகத்தின் பார்வை அந்தப் படகின் பக்கம் படவில்லை. தாகத்துக்குத் தண்ணீ­ர்கூட இல்லாமல், ஒரு மாதத்துக்கும் மேலாக அந்தப் படகில் வந்த தமிழர்கள் மனிதக் கருவாடுகளாக மிதந்தபோதும், இந்த உலகம் உற்றுப்பார்க்கவில்லை. இது தான் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகுக்குப் போதித்த பழந்தமிழர் வாழ்வின் இன்றைய எதார்த்த நிலை.
இன்னொரு புறமோ தாய்த்தமிழ் நாட்டில் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் இதற்கு முன் நாடு எப்பொழுதும் சந்தித்திராத வகையில் குடும்ப சர்வாதிகாரமும், ஊழலில் ஊறித்திளைக்கும் போக்கும், அடக்குமுறைகளும் மக்கள் விரோத ஆட்சியும், தமிழர் விரோதப் போக்கும் நடைபெறுகின்றன. தமிழகத்தின் உயிர்நாடியான, நம் அனைவருக்கும் சோறு போடும் விவசாயிகள் கருணாநிதியின் ஆட்சியில் (2005 சனவரியிலிருந்து 2009 டிசம்பர் வரை) அதிகளவில் 3797 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள் என தேசிய குற்றவியல் பதிவாணையத்தின் புள்ளி விவரங்கள் கூறுகின்றது. உலகுக்கு சோறு போட்ட உழவன் நிலை இன்று இவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது. இது போக மீனவனுக்கு தினந்தோறும் சிங்களன் துப்பாக்கி குண்டுகளைப் பரிசளிக்கின்றான். இதனையும் கேட்பதற்கு நாதியில்லை.
இவ்வாறு கேட்பதற்கு நாதியற்றதாக வேதனையும் துயரமுமாகத் தமிழர் தம் வாழ்வு இன்று மாறிப் போய் விட்டது. ஆனாலும் இதனை மாற்றிக் காட்ட வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. ஆகவே தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் வாக்கினை முன்னிறுத்தி அநீதிக்கு எதிராக, அடக்குமுறைக்கு எதிராக, இன அழிப்பிற்கு எதிராக, ஆட்சியாளர்களின் சர்வாதிகாரத்திற்கு எதிராகத் தமிழர் தம் நல் வாழ்விற்காய் போராடுவோம் என்பதனை இந்த நன்னாளில் சூளுரைத்து அதன் வழி பயணிப்போம் என்று தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
Share/Bookmark

No comments:

Post a Comment