Saturday, January 29, 2011

The regular run-of-the-mill Madurai movies, 'Aadukalam'

இரண்டு கால் சேவல்கள் சீறியும் கீறியும் கிழித்துக்கொள்ளும் சண்டைக்களத்தின் பின்னணியில்.... அதே இரண்டு கால் மனிதர்கள் கோபமும் துரோகமுமாக அழித்துக்கொள்ளும் நிஜக்களம்தான் இந்த அழுத்தமான 'ஆடுகளம்'.

இரத்தத்துடன் பரபரப்பாக ஆரம்பிக்கும் படம் உடனேயே முன்னோக்கி நகர்கிறது. பல வருடங்களாக தனது சேவல்களை வைத்து ஜெயித்து வருபவர் பேட்டைக்காரர். இவரிடம் ஆண்டாண்டு காலமாகத் தோற்பவர் ரத்தினம். ரத்தினம், தன் அம்மா இறப்பதற்குள் ஒரு முறையாவது பேட்டைக்காரரை ஜெயித்துவிடத் துடிக்கிறார். அதற்காக சில குழி பறிப்பு வேலைகளையும் செய்கிறார். பேட்டைக்காரனுக்கு பக்க பலமாக தனுஷ் மற்றும் கிஷோர்.
ஒருநாள் பேட்டைக்காரனின் நண்பன், ரத்தினம் குழுவால் கொல்லப்பட இறந்தவர் பேரில் ஒரு சேவல் சண்டை போட்டித்தொடர் நடத்தப்படுகிறது. இதில் இருதரப்பும் தங்கள் பகையைத் தீர்த்துக் கொள்ள களமிறங்குகிறது. இதற்காக பேட்டைக்காரர் பல சேவல்களைத் தயார்படுத்த, அதே நேரத்தில் தனுஷும் பேட்டைக்காரருக்காக தன் சேவலைத் தயார்படுத்துகிறான். அச்சேவல் ஏற்கனவே பேட்டைக்காரரால் கழித்துவிடப்பட்ட சேவல். இதனால் பேட்டைக்காரர் - தனுஷிற்கு இடையே பிரச்சினை வெடிக்கிறது. இருந்தும் தனுஷின் சேவல் வெற்றி பெற்றதோடு பெருந்தொகை பந்தயப் பணத்தையும் வெல்கிறது. ரத்தினம் ஏற்கனவே போட்டுக்கொண்ட பந்தய அடிப்படையில் மொட்டையடித்துக் கொள்கிறார்.

இனி என்ன? இனி தானே பூகம்பம் ஆரம்பம். இதற்குள் தனுஷ் ஹீரோயின் வெள்ளைக்காரப் பெண்ணை (உள்ளுர் தான்) காண்கிறார். காதல் கொள்கிறார். எதிர்பாராதத் திருப்பங்களுடன் இரண்டாவது பாதி நகர்கின்றது. திரையரங்கம் நிசப்தமாக அடுத்து நடக்கப்போவதை உற்றுப்பார்க்கிறது. அதை வெள்ளித்திரையில் பார்த்துக்கொள்ளுங்கள்.
கருப்பாக தனுஷ்.... திரை நடிப்பில் என்ன என்ன பரிமாணங்களும், கலைச்சொற்களும் உள்ளனவோ அத்தனைத் தலைப்பிலும் பாராட்டலாம் தனுஷை.... மெலிந்த உடலில் கணகச்சித உடல்மொழி, முகபாவனைகள்.... என்ன வேண்டும் என்று கேட்டு வழங்குகிறார் (இத்தனைக்கும் ரியாக்ஷனுக்கு டைமிங் சலுகைகள் கூட சீன்களில் ரொம்ப குறைச்சல்!) முக்கியமாக வசன வெளியீடும், மாடுலேஷனும்.. தனக்குப் பரிச்சயமில்லாத மதுரைத் தமிழில் தனுஷ் காட்டியிருக்கும் சகஜம் அவரை 'நடிகன்' என்று அழுத்திப் பதியவைக்கிறது.
தபசி அழகு! நடிக்க வாய்ப்பில்லாவிட்டாலும் ஒளிரும் உதடுகளும் அதில் முத்துப்பற்களைப் பதித்துப் பேசும் தமிழுமாய்ப் பாத்திரத்தில் பொருந்துகிறார். (நல்லவேளை த்ரிஷா நடிக்கவில்லை..!)
படத்திற்குப் புதுமுகமாக நடித்திருக்கும் ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் தேர்வு மிகக் கச்சிதமானது.. முகத்தில் பாதியை மீசை மூடியிருந்தாலும் அவரது கண்களே பல கதைகளைப் பேசுகிறது. பேட்டையப்பன் என்ற கேரக்டரான இவருக்குக் குரல் கொடுத்திருக்கும் ராதாரவியின் இம்மியளவும் மாறாத மாடுலேஷன்ஸ் அசத்தல். சண்டைக் கோழியைப் போல கொத்திக் கொத்திப் பேசும் இந்த வசன மாடுலேஷனைத் தேர்வு செய்தமைக்கு இயக்குநரையும் பாராட்டத்தான் வேண்டும்.
சேவல் சண்டை பஞ்சாயத்தில் இன்ஸ்பெக்டர் ரத்தினத்திடம் உறுமுவதாகட்டும்... தனுஷை விட்டுக் கொடுக்காமல் கிஷோரிடம் பேசுகின்ற காட்சியிலும், இன்ஸ்பெக்டரை நேரில் பார்க்கப் போய் உன் செல்வாக்கை நிரூபிச்சிட்டீல்ல என்று பொருமித் தள்ளுவதாகட்டும்.. தனுஷ் ஒவ்வொரு முறையும் ஜெயிக்கின்ற போதெல்லாம் தனது ஆற்றாமையை ஒதுக்கிவைத்துவிட்டு நான் வளர்த்த பையனாச்சே.. விவரம் தெரியாமயா இருந்திருப்பான் என்று விரோதத்தைத் தேனில் குழைத்துப் பேசுகின்ற அந்தப் பேச்சாகட்டும்.. மனைவியை சந்தேகப்பட்டு பேசுகின்ற வில்லன் பேச்சின்போது நாம எழுந்து அடித்துவிடலாமா என்கிற லெவலுக்கு இவரது கேரக்டர் ஸ்கெட்ச் மனதில் ஒட்டிப் போய்விட்டது.. சபாஷ் கவிஞரே!
தனுஷுடன் வரும் அந்த கருப்பு நண்பன், அவரை 'கில்லி' படத்தில் விஜய்யின் கபடி குழுவில் பார்த்திருப்பீங்க.. திடீர், திடீரென்று டிரான்ஸ்லேஷன் செய்வதற்காக உதவியாளராக இருக்கின்றபோது நகைக்க முடிகிறது. அவருக்கு நல்ல வாய்ப்பு இது. உயிருக்குயிரான தம்பியாகப் பழகி பட்டென நட்பு உடைந்து மோதலுக்குத் தயாராக இருக்கும் அண்ணனாக கிஷோர்.. இவரது வேகத்தைப் பார்த்து உடன் இருந்து ஒத்து ஊதும் பேட்டையப்பனை கடைசிவரையில் புரிந்துக் கொள்ளாத வகையில் திரைக்கதையை அமைத்திருக்கிறார் வெற்றிமாறன்.
மீனாளின் நடிப்பும் சொல்லத் தகுந்தது.. தனுஷ் சொல்லித்தான் சேவலை வாங்க ஆள் வந்திருக்கிறது என்பதைக் கேட்டவுடன் பேட்டையப்பன் கொதி நிலையில் நிற்க.. பேச்சை மாற்றிப் பேசுகின்ற அந்த சமாளிப்பு.. அவர் தன்னை சந்தேகப்பட்டுப் பேசியவுடன் மண்ணை வாரியள்ளித் தூவிவிட்டு புலம்பியபடியே செல்வதுமாக அக்மார்க் தெக்கத்திப் பொண்ணுதான்..
தபசியுடனான காதல் திணிக்கப்பட்ட விஷயம் என்கிற ஒன்றுதான் கதையில் உறுத்துகிறதே தவிர, மற்றபடி கதை நீட்டாக ஹைவேஸில் பயணிக்கும் ஆம்னி பஸ் போலத்தான் அலுங்காமல், குலுங்காமல் போயிருக்கிறது. இடைவேளைக்குப் பின்னான காட்சிகள் இறுக்கமாக இருப்பதால் ரசிகர்களின் ஆரவாரம், எதிர்பார்ப்பு எல்லாம் புஸ்ஸாகிப் போன நிலையில்தான் இருந்தார்கள். ஆனாலும் கதையின் முடிவைக் காண அனைவரும் ஆவலோடு காத்திருந்ததால், அந்த டெம்போ குறையாத அளவுக்குத் திரைக்கதையைக் கொண்டு போயிருந்ததால் படம் தப்பித்தது என்று நினைக்கிறேன்..
தனுஷ் இது போன்ற படங்களைத் தேர்வு செய்து நடித்தால் அவருக்கும் நல்லது. நமக்கும் நல்லது என்று சொல்லும் அதே நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்லித்தான் ஆக வேண்டும். படத்தில் மிக மோசமான விஷயம் ஒன்றே ஒன்று.. அது ஒலிப்பதிவு.. பாதி வசனங்கள் கேட்க முடியாத அளவுக்கு இருந்தது ஏன் என்று தெரியவில்லை.. சென்னையில் இருக்கும் அதி நவீன தியேட்டர்களிலேயே முடியவில்லை என்றால் தமிழ்நாட்டின் மற்றப் பகுதிகளில் எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதையும் யோசிக்க வேண்டும்.
சமீப காலமாக வெளி வந்த முக்கியமான திரைப்படங்களிலெல்லாம் ஒலிப்பதிவு மிக மோசமாகத்தான் இருந்தது.. அதுவொரு ஸ்டைல் மாதிரி ஆக்கிவிட்டார்களோ என்னவோ.. நல்லவேளை தபசிக்கு ஆண்ட்ரியா குரல் கொடுத்திருக்கிறார் என்பதால் அந்தப் பொண்ணு கொஞ்சம் பிழைத்துப் போனது.. மற்றபடி இது ஒரு முக்கியப் பிரச்சினை.. தீர்க்க வேண்டியது இயக்குநர்களின் கடமை.
சேவல் சண்டைகள் யாவும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸில் செய்யப்பட்டிருக்கின்றன.... நார்நியா சிங்கத்துக்குப் பிறகு உண்மையென்று நம்பவைத்து ஏமாற்றியவை இந்த கிராஃபிக்ஸ் சேவல்கள்தான்! தத்ரூப உழைப்பு...! சில இடங்களில் தெரியும்தான்... அதைத் தவிர்க்க முடியாது... தவிர்த்திருக்கத் தேவையுமில்லை.... கலை இயக்குநரும் தன் பங்குக்கு சிறப்பாகவே செய்திருக்கிறார். தனுஷின் வீடு, பேட்டையனின் சேவல் கூடுகளுடன் கூடிய வீடு என பல இடங்கள் இயல்பாகவே இருக்கின்றது. சண்டைக் காட்சி அதீத சினிமாத்தனம் இல்லாமல் சாதாரணமாக கட்டிப்புரண்டு சண்டை போடுவது போல அமைத்திருப்பது ரசிக்க வைக்கிறது
வேல்ராஜனின் ஒளிப்பதிவுக்குத் தனிப்பதிவு போட வேண்டும்... ஆங்கிள்களை வெற்றிமாறன் கேட்டு வாங்கியிருக்கலாம் என்றாலும் இயக்குநரின் கண்களாக அவதனித்து பாத்திரங்களின் வேகத்தில் சம்பவங்களின் தாக்கத்தை வெறும் காட்சிகளாக இன்றி ஒளியாகவே பதித்திருக்கிறார்.... டிஇ.கிஷோரின் படத்தொகுப்பு படத்தின் உயிரை உடலோடு கோர்த்திருக்கிறது.... ஜீ.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அருமை. அதைவிடப் படத்தின் பின்னணி இசை 'யாரு இசையமைப்பாளர்' என்று கேட்கவைத்து 'ஜீ.வி.பிரகாஷா' என்று திகைக்க வைக்கிறது!! குருவித் தலையில் பனங்காயை எளிமையாகத் தூக்கிச் சுமந்திருக்கிறார் ஏற்கெனவே 'வெயிலோடு விளையாடி'யவர்!!
வெற்றிமாறனின் இரண்டாவது திரைப்படம்.... திரைப்படம் எடுக்கத் தேவைக்கும் அதிகமாக மெனக்கிட்டு எடுத்துக் கொடுத்திருக்கிறார் இந்தப் படத்தை.... உழைப்பு வீண்போய்விடக் கூடாது என்னும் எச்சரிக்கை உணர்வும் இயக்கத்தில் தெறிக்கிறது.

Share/Bookmark

No comments:

Post a Comment