Thursday, December 30, 2010

நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தாDec31.2010

நான் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன் என்று நித்யானந்தா சாமியார் கூறினார்.

நித்யானந்தா சாமியாரின் 34-வது பிறந்தநாள் விழா நேற்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள நித்யானந்தா தியான பீடத்தில் நடந்தது. இதில் நித்யானந்தா கலந்துகொண்டு ஜீவன் முக்த சமுதாயம் செய்வோம் என்ற தலைப்பில் சத்சங்கம் நடத்தினார். அவர் பேசியதாவது:-
33 ஆண்டுகளை முடித்து 34-வது ஆண்டில் காலெடுத்து வைத்துள்ளேன். கடந்த 10 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக பொதுமேடையில் ஏறி தமிழில் வாய் திறந்திருக்கிறேன். தங்கள் துறையில் இருப்பவர்களை தாக்குவது அரசியல். ஆனால் எந்த தவறும், வம்பும் செய்யாத நம்மை அழிக்க நினைப்பது ராட்சச தன்மை.
120 இடங்களில் நமது வழிபாட்டு தலங்கள் உள்ளன. அதில் தமிழ்நாட்டில் மட்டும்தான் 17 இடங்களில் வழிபாட்டு தலங்களை கொளுத்தி இருக்கிறார்கள், 7 இடங்களில் சன்னியாசிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். எல்லோருக்கும் இழைக்கப்பட்ட அநீதியை தமிழக முதல்வருக்கு எங்கள் உணர்வை உருக்கி கடிதமாக எழுதி வைத்துள்ளேன். அதில் உங்கள் கண்­ணீர், வேதனை எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் எனது ரத்தத்தால் கையெழுத்து போட்டு அனுப்ப இருக்கிறேன். ஒரு லட்சம் பக்தர்களும் ரத்த கையெழுத்து போட்டும், ரத்தத்தால் கைநாட்டு வைத்தும் அனுப்புகிறோம்.
கோடி கணக்கில் பணம் கேட்டு மிரட்டப்பட்டேன். மிரட்டிய நபர்கள் யார் என்பதை நீதிமன்றத்தில் தெரிவிப்பேன். அவர்களின் மிரட்டலுக்கு பணியவில்லை. அதனால் பக்தர்கள் மிரட்டப்பட்டு அவர்களிடம் இருந்து மிகப்பெரிய அளவில் பணம் பறிக்கப்பட்டது. அதற்கு போதிய ஆதாரம் இல்லாததால் அமைதி காத்தோம். இதற்கு மேலும் சொல்லப்படாமல் இருந்தால் அது சொல்லாமலேயே அழிந்துவிடும் என்பதால் உலகின் முன் பகிர்ந்து கொள்கிறேன். இவ்வாறு நித்யானந்தா பேசினார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- 
டி.வி.யில் வெளியான சி.டி. உண்மையா, அதில் இருப்பது நீங்கள்தானே?
பதில்:-  
எனக்கும், அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவை சித்தரிக்கப்பட்டவை. நீதிமன்றத்தில் நான் நிரபராதி என்று நிரூபிப்பேன்.
கேள்வி:- 
உங்கள் படுக்கை அறையில் கேமரா வைத்தவருக்கும், உங்களுக்கும் என்ன உறவு முறை, என்ன கருத்து வேறுபாடு?
பதில்:  
அவர் எனது சீடராக இருந்தார். வேறுகாரணம் தெரியவில்லை.
கேள்வி:- 
ரஞ்சிதாவை பார்த்திருக்கிறீர்களா? ரஞ்சிதாவை உங்களுக்கு எவ்வளவு நாளாக தெரியும், அவரை நீங்கள் நேரில் சந்தித்திருக்கிறீர்களா?
பதில்:- 
ரஞ்சிதா எனது பக்தை. அவரை ஒரு வருடத்திற்கும் மேலாக தெரியும். அவர் ஆசிரமத்திற்கு வந்து சென்றுள்ளார்.
கேள்வி:- 
எதற்காக உங்களிடம் கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டினார்கள்?
பதில்:- 
சி.டி.யை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டார்கள். கெட்டபெயரை ஏற்படுத்தி, புகார் கொடுத்து சட்டரீதியாக மிரட்டுவோம் என்று கூறினார்கள். இவ்வாறு நித்யானந்தா கூறினார்.

Share/Bookmark

No comments:

Post a Comment