Dec.30.2010
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் என்னைத் தாக்கியும், சிறிதும் நாகரீகம் இன்றி மறைந்த என்னுடைய தந்தையாரை வம்புக்கிழுத்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்து எனக்கு அவர் மீது உள்ள அக்கறையால் ஐயோ! பாவம்! என்றுதான் தோன்றியது என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
சமீபத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்து வீரபாண்டி ஆறுமுகம் அறிக்கை விடுத்திருந்தார். இதற்குத் தற்போது இளங்கோவன் பதிலளித்துள்ளார். காங்கிரஸ் 126வது தொடக்க விழா மற்றும் வாசன் 46வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் சார்பில், அதன் தலைவர் தணிகைமணி தலைமையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில், அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு 100 மெத்தைகள் வழங்கும் விழா நடந்தது. இதில் இளங்கோவன் பேசியதாவது:-
மூப்பனார் மகன் என்பதால் மட்டும் வாசனுக்கு கட்சியிலும், மக்கள் மத்தியிலும் செல்வாக்கு வரவில்லை. வாசனுக்கு எம்.பி., பதவி தர வேண்டுமென்று கூறிய போது அதை மறுத்தவர் மூப்பனார். இன்றோ தன் மகனை முதல்வராக்க துடிக்கும் தலைவரும் நம் நாட்டில் உள்ளார். கட்சியில் உள்ள வயதானவர்களை வாசன் சமாளிப்பது தான் எனக்கு அவரிடம் பிடித்த காரியம். ஏனெனில், எங்கள் கட்சியில் உள்ள பெரியவர்கள் ஒரு மாதிரியானவர்கள். அவர்களை நிச்சயம் என்னால் அரவணைத்து செல்ல முடியாது. நாட்டின் பெரிய தலைவர்கள் பலர் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுத்துக் கொண்டனர்.
தமிழக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் என்னைத் தாக்கியும், சிறிதும் நாகரீகம் இன்றி மறைந்த என்னுடைய தந்தையாரை வம்புக்கிழுத்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்து எனக்கு அவர் மீது உள்ள அக்கறையால் ஐயோ! பாவம்! என்றுதான் தோன்றியது.
பெரியவர் ஆறுமுகம் இப்போது பொதுவாழ்விலும், அவர் சார்ந்திக்கிற கட்சியிலும் இறங்கு முகமாக உள்ளார். அதைச் சரிகட்ட என்னை கொச்சைப்படுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தருவதை நான் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார். எப்படி என எனக்குத் தெரியவில்லை.
என்னுடைய உயிரைப்பற்றி எப்போதும் கவலை கொள்ளாதவன் நான். அதற்காக பதவியைப் பயன்படுத்தி மக்களின் நல்வாழ்வை பாழாக்குகின்றவர்களை தட்டிக்கேட்கும் கடமையிலிருந்து நான் எக்காலமும் தவற மாட்டேன். காங்கிரஸ் பேரியக்கத்திற்கு எது நல்லதோ அதைத் தொடர்ந்து செய்வேன். கோடானு கோடி காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை யாருக்கும் அஞ்சாமல் தொடர்ந்து சொல்வேன்.
அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமைக்கும் குறிப்பாக அருமை அன்னை சோனியா காந்திக்கும் கட்டுப்பட்டவனாக என்றும் இருப்பேன் என்பதோடு, பெரியவர் ஆறுமுகம் போன்றவர்களின் மிரட்டலையும், அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள எப்பொழுதும் தயாராகவே உள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment