Friday, December 31, 2010

கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்:மருத்துவ சீட்

தனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை விவகாரத்தில், இந்திய மருத்துவ கவுன்சில் என்ன நடவடிக்கை எடுக்கும் என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து மனு தாக்கல் செய்யவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவிடுவோம் என உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்த கிருத்திகா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:-
எம்.பி.பி.எஸ்., படிப்பில் அரசு ஒதுக்கீட்டில், எனக்கு இடம் கிடைத்தது. சென்னை, மாங்காட்டில் உள்ள ஸ்ரீமுத்துகுமரன் மருத்துவக் கல்லூரியில், சேர்வதற்காக உத்தரவிடப்பட்டது. என் தந்தை, காலை 11 மணி முதல் கல்லூரியில் காத்திருந்தார். சாலை விபத்தால், மாலை 5.40 மணிக்கு தான் என்னால் கல்லூரிக்கு வர முடிந்தது. மாலை 5 மணிக்கு பின் வந்ததால், எனக்கு கல்லூரியில், அனுமதி கிடையாது என மறுத்துவிட்டனர். மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க, செப்.30 கடைசி தேதி என உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. ஆனால், கடைசி தேதியில் சேர்வதற்கு நேரம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. தேர்வுக் குழு தான் நேரத்தை நிர்ணயித்துள்ளது.
என் இடத்தில் வேறொருவரை சேர்த்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடத்தில், நிர்வாகம் சார்பில், வேறொரு நபரை சேர்க்க முடியாது. கணிசமான அளவுக்கு பணம் பெற்றுக் கொண்டு சேர்ந்துள்ளனர். அந்த நபர் மட்டும் எப்படி மாலை 5 மணிக்கு மேல் கிடைத்தார் என, தெரியவில்லை. எனவே, எம்.பி.பி.எஸ்., படிப்பில் என்னை சேர்க்க, ஸ்ரீமுத்துகுமரன் மருத்துவக் கல்லூரிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு, ஸ்ரீமுத்துகுமரன் மருத்துவக் கல்லூரி தரப்பில், தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ளதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் செப். 30ல் தான், கல்லூரியில் சேர்ப்பதற்கான கடைசி தேதி என உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. 30ம் தேதி மாலை 5 மணிக்கு முன், அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்த எட்டு பேரும் வரவில்லை. எனவே, நிர்வாக ஒதுக்கீட்டில் பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில், மாலை 5 மணிக்குப் பின், எட்டு பேரை சேர்த்தோம். மாலை 5 மணிக்கு அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்கள் காலாவதியாகி விடுகிறது. அதன்பின், நிர்வாக ஒதுக்கீட்டில் இடங்களை நிரப்புவது சட்ட விரோதம் அல்ல. இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.சிங்காரவேலன் ஆஜரானார். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியுள்ளதாவது:-
மனுதாரருக்கான இடத்தில் வேறொருவர் சேர்க்கப்பட்டுள்ளார். அப்படி சேர்க்கப்பட்ட மாணவருக்கு நோட்டீஸ் அனுப்பியும், மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, அந்த மாணவர் சார்பில் நோட்டீசை, மருத்துவக் கல்லூரி தரப்பில் ஆஜராகும் வக்கீல் ஏற்க வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டில் எட்டு மாணவர்களையும் சேர்க்க, மாலை 5.30 மணிக்கு மேல் எவ்வளவு நேரம் ஆகியது என்பதை கல்லூரியின் வக்கீல் தெரிவிக்க வேண்டும்.
மாணவர்கள் அனைவரையும் குறிப்பிட்ட நேரத்துக்குள் சேர்க்க வேண்டும் என, நேர வரம்பு எதையும் இந்திய மருத்துவ கவுன்சில் நிர்ணயிக்கவில்லை என, அதன் வக்கீல் தெரிவித்துள்ளார். அப்படியென்றால், மாலை 5 மணிக்குப் பின், மனுதாரரை ஏன் கல்லூரியில் சேர்க்கவில்லை? அதுவும் மாலை 5 மணிக்குப் பின், நிர்வாக ஒதுக்கீட்டில் எட்டு பேரை சேர்த்துள்ளனர். மனுதாரர் இடத்திலும் ஒருவரை சேர்த்துள்ளனர். இது உண்மையென்றால், கல்லூரிக்கு எதிராக இந்திய மருத்துவ கவுன்சில் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை இந்த நீதிமன்றம் தெரிந்து கொள்ள விரும்புகிறது. எனவே, இதுகுறித்து இந்திய மருத்துவ கவுன்சில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜனவரி 3ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அதற்கு முன், இந்திய மருத்துவ கவுன்சில் மனு தாக்கல் செய்யவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரி நேரில் ஆஜராக, நாங்கள் உத்தரவிடுவோம். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Share/Bookmark

No comments:

Post a Comment