முதல்வர் கருணாநிதி மீது வழக்கு தொடர அனுமதி கோரி ஆளுநரிடம் சாமி மனு :
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் முதல்வரின் விருப்புரிமையின் கீழ் வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படுவது தொடர்பாகவும், அது தொடர்பாக முதல்வர் கருணாநிதி மீது வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி மனு அளித்துள்ளார்.
சுப்பிரமணிய சாமியிடம் மனுவை நேரில் பெற்றுக் கொள்ள ஆளுநர் மறுத்துவிட்டார். இதையடுத்து அந்த மனுவை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநரின் பாதுகாவல் அதிகாரியிடம் சாமி வழங்கினார். இது குறித்து நிருபர்களிடம் சாமி கூறியதாவது:-
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் மனைகள் மற்றும் வீடுகளை அரசின் விருப்புரிமைப் பிரிவின்கீழ் ஒதுக்கீடு செய்ததில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக பத்திரிக்கைகள் மூலமாகத் தெரியவந்துள்ளது. விதிகளுக்கு உட்பட்டு உரிய நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல், அதிகாரத்தில் உள்ளவர்களில் வேண்டியவர்களுக்கும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அனுமதி கேட்டு ஆளுநரிடம் மனு அளித்துள்ளேன்.
அரசின் விருப்புரிமைப் பிரிவின்கீழ், தகுதியின்றி மனை ஒதுக்கீடு பெற்றவர்கள் பட்டியல், இதில் நடந்துள்ள விதி மீறல்கள், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் உதவியாளருக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மனையை ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை ஆகிய விவரங்களையும் மனுவுடன் சமர்பித்துள்ளேன். தகவல் பெறும் உரிமை மூலம் இது தொடர்பான ஆவணங்கள் திரட்டப்பட்டன. இதன்மூலம் தமிழக முதல்வர் மீது 23 ஊழல் புகார்கள் தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதில் முதலில் வீட்டுவசதி வாரிய முறைகேடு தொடர்பாக வழக்குத் தொடர ஆளுநரின் அனுமதி கோரியுள்ளேன். அனுமதி கிடைத்தவுடன் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்படும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் பணம் வாங்கிய விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி தனிப்பட்ட முறையில் செயல்பட்டுள்ளதால், அதில் வழக்குத் தொடர ஆளுநரின் அனுமதி தேவையில்லை. 2ஜி ஒதுக்கீடு தொடர்பாக வழக்கு வரும் 22ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது, முதல்வர் கருணாநிதி மீதான வழக்கை தனியாகத் தொடர்வதா அல்லது ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குடன் சேர்த்து நடத்துவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment